மழை தீவிரம்; பல மாவட்டங்களுக்கு கனமழை, காற்று மற்றும் மண்சரிவு எச்சரிக்கை.!!!
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நாட்டின் பல பகுதிகளில் கனமழை, பலத்த காற்று மற்றும் மண்சரிவு அபாயம் தொடர்ந்தும் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று (06) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பதிவாகும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடமத்திய, சபரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மகாவலி நீர்த்தேக்கங்களின் நிலை
மகாவலி அதிகாரசபையின் தகவலின்படி, நாட்டின் பல முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றது.
கொத்மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைவீழ்ச்சி குறைந்துள்ள போதிலும், கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டத்தை 90 முதல் 95 சதவீதம் வரை பேணுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மின்சார உற்பத்திக்காக வினாடிக்கு 100 கனமீற்றர் நீர் வெளியேற்றப்படுவதுடன், இதன் மூலம் தேசிய மின்வலையமைப்பிற்கு 200 மெகாவோட்டிற்கும் அதிகமான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
பொல்கொல்ல நீர்மாற்றுத் திட்டம் மற்றும் கொத்மலை, கம்பளை பகுதிகளில் இருந்து வரும் நீரின் காரணமாக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து, அதன் கொள்ளளவு 50 சதவீதத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் காணப்பட்ட சிறிய அளவிலான வெள்ள அபாயம் தற்போது குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மண்சரிவு எச்சரிக்கை தொடர்கிறது
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO), கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கையை தொடர்ந்தும் அமுலில் வைத்துள்ளது.
மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்:
கண்டி மாவட்டம்: உடுதும்பர, கங்க இஹல கோரளை, பஸ்பாகே கோரளை, தெல்தோட்டை, தொலுவ, மெததும்பர, பன்வில, உடபலாத்த.
கேகாலை மாவட்டம்: யட்டியந்தோட்டை, புலத்கொஹுபிட்டிய, அரநாயக்க, தெஹியோவிட்ட, தெரணியாகலை.
நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ, நோர்வுட், தலவாக்கலை, கொத்மலை கிழக்கு, கொத்மலை மேற்கு, நுவரெலியா.
இரத்தினபுரி மாவட்டம்: ஒப்பநாயக்க, இம்புல்பே மற்றும் இரத்தினபுரி பகுதிகளில் இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை தொடர்கிறது.
ஹட்டன் பாடசாலைகள் மீண்டும் திறப்பு
சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் பிராந்திய பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்படுவதாக மத்திய மாகாண கல்விச் செயலாளர் எச்.எம். மதுபானி பியசேன தெரிவித்துள்ளார்.
எனினும், நிலவும் காலநிலையை கருத்தில் கொண்டு தேவையான சந்தர்ப்பங்களில் வலயக் கல்விப் பணிப்பாளர்களின் அனுமதியுடன் பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு அதிபர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.