மட்டக்களப்பில் அதிகாலை பயங்கர விபத்து; கடைகளில் மோதிய சொகுசு பஸ், பலர் காயம்.!!!
கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த சொகுசு பயணிகள் பஸ் வண்டியொன்று இன்று (26) அதிகாலை மட்டக்களப்பு–கொழும்பு பிரதான வீதியின் தன்னாமுனைப் பகுதியில் பாதையை விட்டு விலகி, வீதியோரத்தில் அமைந்திருந்த கடைகளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இன்று அதிகாலை சுமார் 4.45 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், பஸ் வண்டிக்கும் அருகிலிருந்த பல கடைகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதற்கட்ட பொலிஸ் விசாரணைகளின்படி, சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்கான முக்கிய காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. எனினும், பஸ்ஸில் பயணித்த சிலர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


