மின்னல் தாக்கி வீடு தீக்கிரை; வீட்டு உபகரணங்கள் அனைத்தும் எரிந்து நாசம்.!!!
அம்பாறை மாவட்டம், இகினியகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்கந்த கிராமத்தில் நேற்று (31) மாலை பெய்த கனமழையுடன் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தால் வீடு ஒன்று தீப்பிடித்து கடுமையாக சேதமடைந்தது.
சம்பவம் நிகழ்ந்த வேளையில் குடும்பத் தலைவர் கொழும்பில் இருந்ததுடன், குடும்பத் தாய் அருகிலுள்ள தையல் நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை தொடங்கியபோது வீட்டிலிருந்த இரண்டு பிள்ளைகளும் பாதுகாப்பு கருதி அருகிலுள்ள வீட்டிற்குச் சென்றிருந்ததால், தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் வீட்டில் எவரும் இல்லாத நிலையில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
மின்னல் தாக்கத்தால் வீட்டின் உள்ளே பரவிய தீயை அப்பகுதி மக்கள் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும், வீட்டிலிருந்த தளபாடங்கள், மின்சாதனங்கள் மற்றும் ஏனைய வீட்டு உபகரணங்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகின.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இகினியகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

