இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி; 9 இந்திய மீனவர்கள் கைது.!!!
தலைமன்னார் உருமலை முனை கடற்பரப்பில் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 9 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (12) இரவு இடம்பெற்ற இந்த நடவடிக்கையில், தடை செய்யப்பட்ட ‘Bottom Trawling’ எனப்படும் கடலின் அடிப்பகுதி வரை வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்த இந்திய இழுவை படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் ஆதாமின் பாலம் பகுதிகள் முக்கியமான உயிர்ப்பல்வகைமை கொண்ட கடற்பரப்புகளாகக் கருதப்படுவதால், அப்பகுதியில் கடல் வளங்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மீன்பிடி படகுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

