இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு: ஜனாதிபதியின் சீர்திருத்தப் பயணத்திற்கு தொடர்ந்தும் முழு ஆதரவு உறுதி.!!!
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சொனாலி ஜெயின்-சந்திரா தலைமையிலான தூதுக்குழு, இன்று (30) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து, இலங்கையின் பொருளாதார மீட்சித் திட்டத்தின் முன்னேற்றத்தையும் அரசாங்கத்தின் சீர்திருத்த நடவடிக்கைகளையும் பாராட்டியது.
ஜூன் 24 முதல் 30 வரை கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட IMF தூதுக்குழுவின் உத்தியோகபூர்வ விஜயத்தின் நிறைவாக இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், நீடிக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் மற்றும் அண்மைய பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
IMF ஆதரவு திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பல நாடுகளை விட இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளதாக தூதுக்குழு தெரிவித்ததுடன், தொடர்ச்சியான வெளிப்புற சவால்களுக்கு மத்தியிலும் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணிய அரசாங்கத்தின் செயல்பாட்டை உயர்வாக மதிப்பிட்டது.
எரிசக்தி நெருக்கடியை திறம்பட கையாண்ட அரசு
எரிசக்தி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அரசாங்கம் வெளிப்படுத்திய தொலைநோக்கு அணுகுமுறை, வலுவான பொருளாதாரக் கொள்கைகளுக்கான அதன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக IMF பிரதிப் பணிப்பாளர் சொனாலி ஜெயின்-சந்திரா தெரிவித்தார்.
அதேவேளை, இலங்கை பொருளாதாரம் தடையின்றி தொடர்ந்து முன்னேறி வருவது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான சாதகமான சமிக்ஞையாக இருப்பதாக IMF செயற்பாட்டுப் பிரதானி ஈவான் பாப்பகியோர்கியு குறிப்பிட்டார்.
செப்டம்பரில் ஏழாவது மீளாய்வு
நீடிக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஏழாவது மீளாய்வு எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளதாகவும், அதற்கு முன்னர் இலங்கை நிறைவேற்ற வேண்டிய அனைத்து பொறுப்புகளும் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் IMF தூதுக்குழு தெரிவித்தது.
மக்களை மையப்படுத்திய பொருளாதார வளர்ச்சி
பொருளாதார ஸ்திரத்தன்மை மட்டுமன்றி, அதன் உண்மையான பலன்கள் மக்களின் வாழ்வாதாரத்தில் நேரடியாக பிரதிபலிக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
அமெரிக்காவின் வரிக் கொள்கை மாற்றங்கள், ‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் யுத்தச் சூழல் போன்ற வெளிப்புற காரணிகள் சவால்களை ஏற்படுத்திய போதிலும், பொருளாதார மீட்சிப் பாதையை உறுதியாக முன்னெடுத்து வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக IMF உடனான ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும், மக்கள் மீது தேவையற்ற சுமைகளை ஏற்படுத்தாமல் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதே அரசாங்கத்தின் கொள்கை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.





