ஹோட்டலில் பெண் வைத்தியர்களை மறைமுகமாக வீடியோ எடுத்த சம்பவம் – இரு இளைஞர்கள் கைது.!!!
கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்ள வருகை தந்து, கொழும்பு நாரஹேன்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பெண் வைத்தியர்கள் சிலர் குளியலறையில் நீராடிக்கொண்டிருந்த போது, அவர்களை கைபேசிகள் மூலம் மறைமுகமாக காணொளி பதிவு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் இலங்கை 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியின் (U-19) உறுப்பினர்கள் என நாரஹேன்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் பெண் வைத்தியர்களை மட்டுமின்றி, சில ஆண்களின் காணொளிகளையும் இவ்வாறு பதிவு செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், பதிவு செய்யப்பட்ட அந்த காணொளிகள் இணையதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளனவா என்பதைப் பற்றி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரஹேன்பிட்டி பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.