இந்தியா மேலும் ஒரு தொகுதி ‘பெய்லி’ பாலங்களை இலங்கைக்கு வழங்கியது.!!!
புயலால் பாதிக்கப்பட்ட வீதிப் போக்குவரத்தை மீளமைக்க 251 மெற்றிக் தொன் உபகரணங்கள் – நிரந்தரப் பாலங்களையும் அமைக்க இந்தியா தயார்.
இலங்கையின் உட்கட்டமைப்பை மீளக் கட்டியெழுப்புவதற்காக இந்தியா வழங்கி வரும் 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான விசேட உதவித் திட்டத்தின் கீழ், மேலும் ஒரு தொகுதி ‘பெய்லி’ (Bailey) பாலங்கள் இலங்கை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளன.
சுமார் 251 மெற்றிக் தொன் எடையுடைய இப்பாலங்களை, இந்தியப் பிரதி உயர் ஸ்தானிகர் மைத்ரி குல்கர்னி, கூட்டுறவு அபிவிருத்திப் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவிடம் நேற்று முன்தினம் (06) கையளித்தார்.
‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்துத் தொடர்புகளை விரைவாக மீள ஏற்படுத்தும் வகையில், இந்திய இராணுவத்தின் பொறியியல் பிரிவினர் இந்தப் பாலங்களை அமைக்கவுள்ளனர்.
ஏற்கனவே நாட்டின் 7 முக்கிய இடங்களில் 8 ‘பெய்லி’ பாலங்கள் வெற்றிகரமாக அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இந்நிலையில், புதிதாக வழங்கப்பட்டுள்ள இந்தப் பாலங்களும் பாதிக்கப்பட்ட மக்களின் போக்குவரத்து மற்றும் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு உதவும் என இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த கட்டமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நிரந்தரப் பாலங்களை நிர்மாணிக்கும் பணிகளையும் இந்தியா விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இத்திட்டம் இலங்கையின் வீதிப் போக்குவரத்து உட்கட்டமைப்பில் நீண்டகால மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



