இரு ஆண்டுகளில் புதிய தோற்றம் பெறும் கண்டி; 4 பிரதான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அரசு தீவிரம்.!!!
-எஸ். சினீஸ் கான்-
மத்திய மாகாண அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கண்டி புனித நகரை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டு வரும் நான்கு பிரதான உள்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களை எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் முழுமையாக நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, நீண்டகாலமாக முடங்கியிருந்த ரூ.14 பில்லியன் செலவிலான கெட்டம்பே சந்தி மேம்பாலத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மூலோபாயத் திட்டத்தின் கீழ் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் நிலவும் சவால்கள் தொடர்பாக விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன ஆகியோர் நேற்று (15) விசேட கள ஆய்வில் ஈடுபட்டனர்.
கண்டி நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் கெட்டம்பே சந்தி மேம்பாலம், மஹய்யாவ நிலத்தடி சுரங்கப்பாதை, வில்லியம் கொபல்லவ வீதி மற்றும் லூயிஸ் பீரிஸ் வீதி ஆகிய நான்கு முக்கியத் திட்டங்களும் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன.
அரசியல், நிர்வாக மற்றும் நிதி சிக்கல்களால் இடைநிறுத்தப்பட்டிருந்த கெட்டம்பே மேம்பாலத் திட்டம், தற்போதைய அரசாங்கத்தின் தலையீட்டின் மூலம் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மீள ஆரம்பிக்கப்பட்டது. கன்னொருவ–கண்டி மற்றும் பேராதனை–கண்டி உள்ளிட்ட பிரதான வீதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் இத்திட்டம் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வில்லியம் கொபல்லவ வீதி ரூ.675 மில்லியன் செலவில் நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படவுள்ளதுடன், கண்டி–பூவெலிகட ஊடாக அம்பிட்டியவை இணைக்கும் லூயிஸ் பீரிஸ் வீதி ரூ.539 மில்லியன் செலவில் இருவழிப் பாதையாகவும், நடைபாதை வசதிகளுடனும் மேம்படுத்தப்படவுள்ளது. மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளில் Soil Nailing எனப்படும் நவீன பொறியியல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேவேளை, கண்டி–யாழ்ப்பாணம் (A-009) பிரதான வீதிக்கும் மலைநாட்டு புகையிரதப் பாதைக்கும் இடையே அமைக்கப்படும் மஹய்யாவ நிலத்தடி சுரங்கப்பாதை, ரூ.650 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. 31.7 மீற்றர் நீளம், 21.8 மீற்றர் அகலம் மற்றும் 9 மீற்றர் உயரம் கொண்டதாக இச்சுரங்கப்பாதை வடிவமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து அபிவிருத்திப் பணிகளையும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் உயர்தரத்துடன் நிறைவு செய்து, பொதுமக்களுக்கு விரைவான நன்மைகளை வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த நிறுவனங்களுக்கு அமைச்சர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.





