வரி ஏய்ப்பு மற்றும் பதிவு தவறுகளுக்கு சட்ட வலை; உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அதிரடி அறிவிப்பு.!!!
வரி செலுத்த வேண்டிய சட்டப்பூர்வக் கடப்பாடு இருந்தும், திட்டமிட்டு வரி செலுத்தத் தவிர்ப்பவர்கள், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யாதவர்கள், வரி அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தவறிய தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது.
2026 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்த உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டத்தின் கீழ், நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் சட்டத்துக்கு இணங்கத் தவறும் நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடரும் அதிகாரம் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணையாளர் நாயகத்திடம் வரிப் பதிவு செய்யத் தவறுதல், வருமான வரி அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகளைச் சமர்ப்பிக்காதிருத்தல் ஆகியவை குற்றங்களாகக் கருதப்படும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான குற்றங்கள் தொடர்பில் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறும் சுருக்க விசாரணையின் பின்னர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 400,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேலும் எச்சரித்துள்ளது.