அஸ்வெசும பயனாளிகள் தெரிவில் அதிரடி மாற்றம்; புதிய சமூக-பொருளாதார மதிப்பீட்டு முறை அறிமுகம்.!!!
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் பயனாளிகளைத் தெரிவு செய்வதற்காக, குடும்பங்களின் சமூக மற்றும் பொருளாதார பாதிப்பு நிலையை அடிப்படையாகக் கொண்ட புதிய மதிப்பீட்டு முறைமையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் விஜேசிறி பஸ்நாயக்க தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
புதிய தெரிவு முறைமையின் கீழ், குடும்பத்தின் வாழ்வாதார பாதுகாப்பு, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, முதியோர், மாற்றுத்திறனாளிகள், நாட்பட்ட நோயாளிகள், இருப்பிட வசதி, அடிப்படைச் சேவைகளுக்கான அணுகல் மற்றும் கடன்பாடுகள் உள்ளிட்ட சமூக-பொருளாதார காரணிகள் முக்கியமாக கருத்தில் கொள்ளப்படவுள்ளன.
தற்போதைய பயனாளிகள் தெரிவு செயல்முறையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில், நடைமுறையில் உள்ள அளவுகோல்களை மறுபரிசீலனை செய்ய அதிகாரிகளுக்கு நாடாளுமன்றக் குழு அறிவுறுத்தியுள்ளது.
நிபுணர் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த புதிய முறைமையின் செயல்திறனை மதிப்பீடு செய்வதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாவட்டங்களில் முன்னோடித் திட்டத்தை நடைமுறைப்படுத்த நலன்புரி நன்மைகள் சபை தீர்மானித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, புதிய சமூக-பொருளாதார மதிப்பீட்டு கட்டமைப்பின் அடிப்படையில் குறிப்பிட்ட மாவட்டங்களில் முன்னோடித் திட்டத்தை முன்னெடுக்க நாடாளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.