மஹர சிறைச்சாலையில் கைதிகள் மோதல்; ஒருவர் உயிரிழப்பு – 6 பேர் படுகாயம், கட்டிடங்களுக்கு தீ வைப்பு.!!!
மஹர சிறைச்சாலையில் இன்று (01) பிற்பகல் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட கடும் மோதல் மற்றும் பதற்றநிலை காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலையில் ஏற்பட்ட திடீர் அமைதியின்மையைத் தொடர்ந்து, கைதிகள் குழுவொன்று பிரதான ஜெயிலர் அலுவலகம் மற்றும் ஒழுக்கக்கட்டுப்பாட்டுப் பிரிவு கட்டிடங்களுக்கு தீ வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து சில கைதிகள் சிறைச்சாலை கட்டிடத்தின் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
சம்பவத்தின் போது சிறைச்சாலைக்குள் இருந்து பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளியில் காத்திருந்த கைதிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருளுக்கு அடிமையான கைதிகள் குழுவொன்றே இந்த அமைதியின்மையைத் தூண்டியிருக்கலாம் என பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மற்றும் மேலதிக பொலிஸ் குழுக்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக அனுப்பப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
தற்போது சிறைச்சாலையின் நிலைமை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.