திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து: 19 வயது பாடசாலை மாணவன் பலி.!!!
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 64ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 19 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் செவ்வாய்க்கிழமை (19) இரவு இவ்விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் மூதூர் – ஆணைச்சேனை பகுதியைச் சேர்ந்த றிஸ்வான் சிப்கி (19) என்ற பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதுடன், அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொரு இளைஞன் காயமடைந்துள்ளார்.
இரு இளைஞர்களும் தோப்பூர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு சென்று, பின்னர் மீண்டும் மூதூருக்கு திரும்பிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்த இளைஞனின் ஜனாஸா மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த இளைஞன் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




