பனை மரத்தில் மோதிய மோட்டார் சைக்கிள் – 17 வயது இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.!!!
அதிகாலை வேளையில் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகச் சென்ற 17 வயதுடைய இளைஞன் ஒருவர், கட்டுப்பாட்டை இழந்து பனை மரங்கள் மற்றும் கொங்கிறீட் தூணில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சவுக்கடி வீதி வளைவில் செவ்வாய்கிழமை அதிகாலை சுமார் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சவுக்கடிப் பகுதியில் இருந்து அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள், வீதியின் வளைவில் திரும்ப முடியாமல் நேராகச் சென்று, அருகிலிருந்த பனை மரங்களிலும் வேலியை ஊடறுத்து கொங்கிறீட் தூணிலும் பயங்கரமாக மோதியதாக, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கமெரா காட்சிகளில் பதிவாகியுள்ளது.
விபத்தில் உயிரிழந்த இளைஞன், தனது நண்பரொருவரின் மோட்டார் சைக்கிளை இரவலாகப் பெற்று, ஆறுமுகத்தான்குடியிருப்பு நோக்கி தனியாகச் சென்றுகொண்டிருந்தபோது இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் மீராகேணி, மையித்துப்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த கபீர் முஹம்மட் ஆதில் (வயது 17) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் போக்குவரத்துப் பொலிஸாரால் மீட்கப்பட்டு ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





