ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உறுப்பினர்களை சந்தித்த: முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர்.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-
சிறி லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான எம்.பி.எம். பைரூஸ், புத்தளம் ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (PUJA) உறுப்பினர்களை புத்தளத்தில் சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.
புத்தளம் ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எம்.யூ.எம். சனூன் தலைமையில், புத்தளம் ஐ-சொப்ட் கல்வி நிறுவனத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில், ஒன்றியத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களான ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் இஸட்.ஏ. சன்ஹீர் மற்றும் கவிஞர் மரைக்கார் உள்ளிட்ட பல ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது, புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, முஸ்லிம் மீடியா போரத்தின் ஊடாகத் தீர்வு காணக்கூடிய விடயங்களுக்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தயாராக இருப்பதாக எம்.பி.எம். பைரூஸ் தெரிவித்தார்.
மேலும், ஊடகத் துறையில் வேகமாக வளர்ந்து வரும் புதிய தகவல் தொழில்நுட்ப சூழலில், மூத்த ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பதற்கான வழிகாட்டல்கள் மற்றும் பயிற்சிகளின் அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், ஊடகத் துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு நவீன தகவல் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கி, திறமையான இளம் ஊடகவியலாளர்களை உருவாக்குவதற்கான திட்டங்களை முன்னெடுக்க வேண்டியதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.
நிகழ்வின் இறுதியில், சிறி லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான எம்.பி.எம். பைரூஸை கௌரவிக்கும் முகமாக, புத்தளம் ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



