காத்தான்குடியில் மூதாட்டி மீது மர்ம நபர் தாக்குதல்; தலையில் பலத்த காயம்.!!!
–பி.எம்.பயாஸ்–
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் ஷரீப் வீதியில் வீட்டில் தனியாக இருந்த 68 வயதான பெண் ஒருவர் மீது அடையாளம் தெரியாத நபர் கூர்மையான ஆயுதத்தால் தலையில் தாக்குதல் நடத்தியதில், அவர் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (23) மாலை சுமார் 5.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த பெண் தனது வீட்டிற்கு அருகில் சிறிய கடையொன்றை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொருட்கள் வாங்குவதற்காக குறித்த கடைக்கு வந்த இரண்டு சிறுவர்கள், பெண் காயமடைந்த நிலையில் இருப்பதைக் கண்டு, அப்பகுதியில் இருந்த பெரியவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு விரைந்தவர்கள் காயமடைந்த பெண்ணை மீட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர் தற்போது கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலை மேற்கொண்டவர் யார் என்பது இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


