காத்தான்குடியில் விசேட போக்குவரத்து சோதனை; விதிமீறியோருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை.!!!
– எம்.ரி.எம்.யூனுஸ் –
காத்தான்குடி பொலிஸ் பிரிவை உள்ளடக்கி, போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட போக்குவரத்து நடவடிக்கையொன்று கடந்த 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்டது.
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 24 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 12 மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி, அன்றைய தினம் மாலை 7.00 மணி முதல் நள்ளிரவு வரை இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள்களை செலுத்தியவர்கள், போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனங்களை செலுத்தியவர்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் உள்ளிட்ட பலருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், நச்சுப் போதைப்பொருளைப் பயன்படுத்திய பின்னர் வாகனங்களை செலுத்தியவர்கள் தொடர்பிலும் விசேட சோதனைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.ஆர்.என். அழககோன் (IP) அவர்களின் தலைமையில், சிறுவர் மற்றும் மகளிர் பிரிவுப் பொறுப்பதிகாரி ரிஷான் மதுசாந்த (IP) மற்றும் போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி செனவிரட்ன (SI) ஆகியோரின் மேற்பார்வையில் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



