பாதுகாப்புப் படைகளின் ஆராய்ச்சி மையங்களை ஒன்றிணைத்து தேசிய மையம் – ஜனாதிபதி.!!!
இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் கீழ் தற்போது இயங்கி வரும் அனைத்து ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையங்களையும் ஒன்றிணைத்து தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையமொன்றை நிறுவுவதன் மூலம், அவற்றின் செயற்பாடுகளின் செயல்திறனையும் பயன்தன்மையையும் அதிகரித்து எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைய முடியும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சு தொடர்பான 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இந்தக் கருத்தை முன்வைத்தார்.
தேசிய பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும், தற்போதைய உலகளாவிய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கும் பாதுகாப்புப் படையினர் நவீன தொழில்நுட்பத்துடன் விரைவாக இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், பாதுகாப்புப் படைகளின் செயற்பாடுகளுக்கு நவீன தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.



