நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கப் போராட்டம்.!!!
• பயணக் கொடுப்பனவு உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு கோரி நாளை முதல் இரு நாள் சுகயீன விடுமுறை.
பயணக் கொடுப்பனவை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, நாளை (10) மற்றும் நாளை மறுதினம் (11) சுகயீன விடுமுறையை அறிவித்து பணிக்கு சமூகமளிக்காமல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானித்துள்ளனர்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க, இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
கிராம உத்தியோகத்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் 600 ரூபாய் பயணக் கொடுப்பனவு கடந்த 8 வருடங்களாக அதிகரிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, 2024ஆம் ஆண்டு குறித்த கொடுப்பனவுக்குப் பதிலாக 20 லீற்றர் எரிபொருளுக்கு இணையான கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்த போதிலும், அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாளை முதல் இரு நாட்களுக்கு சுகயீன விடுமுறையை அறிவித்து பணிக்கு சமூகமளிக்காமல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த தொழிற்சங்க நடவடிக்கை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளது.