சவூதி சந்தையில் இலங்கை தேயிலைக்கு புதிய வாய்ப்பு; போகவந்தலாவ உயர்தர தேயிலைக்கு சர்வதேச அங்கீகாரம்.!!!
சவூதி பல்பொருள் அங்காடிகளில் உயர் தர இலங்கை தேயிலை அறிமுகம்; ‘போகவந்தலாவ’ தேயிலைக்கு சர்வதேச அங்கீகாரம்
இலங்கையின் புகழ்பெற்ற தேயிலை வர்த்தகப் பெயரான ‘போகவந்தலாவ’ (Bogawantalawa) உயர் தர தேயிலை, சவூதி அரேபியாவின் முன்னணி பல்பொருள் அங்காடி வலையமைப்பான தமிமி மார்க்கெட்ஸ் (Tamimi Markets) இல் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரியாத்தில் அண்மையில் நடைபெற்ற இந்த சிறப்பு நிகழ்வில், சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாத் பிரதம அதிதியாக கலந்துகொண்டு, ‘Ceylon Tea Gardens’ என்ற பெயரில் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட போகவந்தலாவ தேயிலையை ஆரம்பித்து வைத்தார்.
இலங்கைத் தேயிலைக்கான முக்கிய ஏற்றுமதி சந்தைகளில் ஒன்றான சவூதி அரேபியாவில், இந்த புதிய அறிமுகம் இலங்கைத் தேயிலைத் துறையின் சர்வதேச விரிவாக்கத்தில் முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலான பாரம்பரியத்தை கொண்டுள்ள போகவந்தலாவ தேயிலை, அதன் தனித்துவமான சுவை, தரம் மற்றும் புத்துணர்ச்சிக்காக உலகளவில் பிரபலமானது என நிறுவனத்தின் இணைத் தலைவர் லலித் குமார் அம்பானி தெரிவித்தார்.
நிகழ்வில் உரையாற்றிய இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாத், சவூதி அரேபியாவிற்கான இலங்கை ஏற்றுமதிகள் அண்மைக்காலமாக வளர்ச்சி பெற்று வருவதாகக் குறிப்பிட்டதுடன், தமிமி மார்க்கெட்ஸில் உயர்தர இலங்கைப் பொருட்களுக்கென தனியான ‘Sri Lanka Corner’ ஒன்றை உருவாக்குவதற்கான யோசனையையும் முன்வைத்தார்.
போகவந்தலாவ தேயிலை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அல்மாஸ் மரிக்கார், இந்தத் தேயிலை ஒரு வணிகப் பொருள் மட்டுமல்லாது, தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் நலன் மற்றும் மேம்பாட்டை நோக்கிய நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வையும் பிரதிபலிப்பதாக தெரிவித்தார்.
மத்திய கிழக்கு மற்றும் ஆசிய பிராந்திய சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஏன். ரணசிங்க, போகவந்தலாவ தேயிலையின் நீண்டகால வெற்றிப் பயணம் குறித்து விளக்கமளித்தார்.
சவூதி அரேபியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதிலும், உலகத் தரம் வாய்ந்த இலங்கை தயாரிப்புகளை மத்திய கிழக்கு சந்தைக்கு கொண்டு செல்வதிலும் இந்த அறிமுகம் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் தமிமி மார்க்கெட்ஸ் பிராந்திய சிரேஷ்ட முகாமையாளர் அய்ஹாம் நாசர், வணிக மேம்பாட்டு பணிப்பாளர் புரூஸ் போஸ்ட்விக், கேடகரி முகாமையாளர் ஹுஸ்னி தாசிம் உள்ளிட்ட பலரும், ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் மற்றும் போகவந்தலாவ நிறுவன பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.




