போதைப்பொருள் ஒழிப்புக்கு புதிய அதிரடி திட்டம்; கடுமையான சட்டங்கள் குறித்து தேசிய செயற்பாட்டு சபையில் முக்கிய முடிவுகள்.!!!
போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பில் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபையில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபை இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கூடியபோதே இந்த விடயம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
போதைப்பொருள் அச்சுறுத்தல் தற்போது தனிநபர்களை மட்டுமன்றி நாட்டின் பொருளாதாரம், சுற்றுலாத்துறை மற்றும் சமூகக் கட்டமைப்பையும் கடுமையாக பாதிக்கும் நிலைக்கு சென்றுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்களை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
நாட்டின் எதிர்கால சந்ததியினரை பாதிக்கும் போதைப்பொருள் பேரழிவை முற்றாக ஒழிப்பதற்கு நடைமுறை நடவடிக்கைகளுடன் சமூக மட்டத்தில் வேகமான மாற்றமும் அவசியம் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதற்காக மதத் தலைவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூக அமைப்புகள் தீவிரமாக பங்களிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
போதைப்பொருள் சட்டங்களில் திருத்தம்
போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் பிணை வழங்கும் முறைமை தொடர்பான சட்டத் திருத்தங்கள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், அவை விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், போதைப்பொருள் வழக்குகளின் விசாரணைகளை தாமதப்படுத்தும் அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகளை விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் 6,414 அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அரச பகுப்பாய்வாளர் திணைக்களம், பொலிஸ் மற்றும் சிறைச்சாலை திணைக்களங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தி, அறிக்கைகள் கிடைத்தவுடன் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான முறையான நடைமுறையை உருவாக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
சிறைச்சாலைகளில் ஏற்பட்ட சேதம்
சிறைச்சாலைகளின் தற்போதைய நிலைமை குறித்தும் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
நீர்கொழும்பு, மஹர, மெகசின், பல்லன்சேனை மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக ரூ.255 மில்லியனுக்கும் அதிகமான சொத்துச் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சிறைக்கைதிகளின் வன்முறை நடத்தைகளை குறைப்பதற்காக அதிகளவில் மனநல மருத்துவர்களின் சேவையைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், 2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க புனர்வாழ்வுச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான வரைபை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
பாடசாலைகளில் போதைப்பொருள் தடுப்பு
பாடசாலைகளில் போதைப்பொருள் பரவலைத் தடுப்பதற்காக கல்வி மற்றும் சுகாதார அமைச்சுகளால் இணைந்து முன்னெடுக்கப்படும் ‘மிதுரு பாடசாலை’ வேலைத்திட்டத்தின் முன்னேற்றமும் மீளாய்வு செய்யப்பட்டது.
மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்குவதுடன், போதைப்பொருள் பயன்படுத்தும் மாணவர்களை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கு பயிற்சி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதிக போதைப்பொருள் அபாயம் காணப்படும் மற்றும் அதிக மக்கள் தொகையைக் கொண்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு விசேட கவனம் செலுத்தி தனித்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
சர்வதேச பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டதுடன், இதுதொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
சமூக ஊடகங்கள் தொடர்பிலும் கவனம்
இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக போதைப்பொருட்களை ஊக்குவிக்கும் குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
அதேவேளை, போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வையும் கருத்துக்களையும் சமூகமயமாக்குவதற்கு சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
போதைப்பொருள் பாவனையைத் தடுப்பது, ஆரம்பத்திலேயே அடையாளம் காணுதல், புனர்வாழ்வு, சட்டத் திருத்தம், நிறுவன மாற்றங்கள், மீண்டும் போதைப்பொருளுக்கு அடிமையாவதைத் தடுப்பது மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு உள்ளிட்ட ஆறு முக்கிய வழிமுறைகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய மூலோபாய வேலைத்திட்டத்தின் முன்னேற்றமும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.
மதத் தலைவர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் பிரிவுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.







