உயர்கல்வியில் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய ஊக்கம்; ஜனாதிபதி நிதியத்தின் ‘சரசவி திரியோ அபிமன்’ திட்டம் தொடக்கம்.!!!
இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் ‘சரசவி திரியோ அபிமன்’ விசேட மாணவர் உதவித்தொகை திட்டத்தை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (11) அலரி மாளிகையில் ஆரம்பித்து வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ், அரச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் தகுதியுடைய ஒவ்வொரு மாற்றுத்திறனாளி மாணவருக்கும் ஒருமுறை வழங்கப்படும் ரூ.1 இலட்சம் நிதியுதவியை ஜனாதிபதி நிதியம் வழங்குகிறது. முதல் கட்டமாக 236 மாணவர்கள் பயனடைவதுடன், மொத்தம் சுமார் 400 மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் உதவிபெறவுள்ளனர்.
நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, சமூகத்தில் அனைவருக்கும் உள்ள உரிமைகள் மாற்றுத்திறனாளிகளுக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் கொள்கை என வலியுறுத்தினார். மாற்றுத்திறனாளிகள் நாட்டிற்கு சுமையல்ல; அவர்கள் நாட்டின் பெறுமதிமிக்க மனித வளம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன, ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் தற்போது மக்களிடம் நேரடியாக சென்றடையும் வகையில் பரவலாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கல்வி மற்றும் சமூக நலத்திட்டங்கள் ஊடாக பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்து வருவதாகவும் அவர் கூறினார்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி நிதியம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் மூலம் அதன் சேவைகள் நாடளாவிய ரீதியில் விரிவடைந்துள்ளதாக தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட நன்மைகள் 59 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வுகள் ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா, ஜனாதிபதி நிதியத்தின் அதிகாரிகள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், அரச அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.












