இலங்கைக்கு புதிய முதலீட்டு வாய்ப்புகள்; சீன முதலீட்டாளர்களுடன் ஜனாதிபதி முக்கிய சந்திப்பு.!!!
சீனா தொடர்பாடல் நிர்மாணிப்பு நிறுவனத்தின் (CCCC) தலைவர் செங் பிங்னன் தலைமையிலான உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (11) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, குறிப்பாக கொழும்பு துறைமுக நகரை (Port City) மையமாகக் கொண்டு தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள எதிர்கால திட்டங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
ஜனாதிபதியின் தொலைநோக்குத் திட்டங்கள் இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் முக்கிய காரணியாக அமைந்துள்ளதாக CCCC நிறுவனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
மேலும், தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்கள் மற்றும் அதன் மீதான அதிகரித்துள்ள நம்பிக்கை காரணமாக, இலங்கைக்கு மேலும் பல பாரிய முதலீட்டு வாய்ப்புகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சீன நிறுவனத்தின் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் டிஜிட்டல் துறைகளில் முதலீடு
இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வர்த்தக விநியோகங்கள் மற்றும் டிஜிட்டல் துறைகளில் முதலீட்டு வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்துவதில் ஆர்வமாக இருப்பதாக சீன முதலீட்டாளர்கள் தெரிவித்தனர்.
இலங்கையை இந்தத் துறைகளுக்கான பிராந்திய மையமாக மாற்றுவதன் மூலம், மேலும் அதிகமான முதலீட்டு வாய்ப்புகளை நாட்டுக்குள் ஈர்க்க முடியும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
90% உள்ளூர் தொழிலாளர்கள்
முதலீட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பங்களில் 90 சதவீதம் வரையான உள்ளூர் தொழிலாளர்களை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சீன நிறுவனங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதன் மூலம் இலங்கையில் பெருமளவிலான மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு
இந்த சந்திப்பில் தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ அமரசேகர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அத்துடன், CCCC நிறுவனத்தின் வெளிநாட்டு வணிகப் பணிப்பாளர் டாங் சியாவோலியாங் (TANG QIAOLIANG), ஒருங்கிணைந்த பிரிவின் பிரதி முகாமையாளர் ஜி ஹைஜுன் (JI HAIJUN), சீனா துறைமுக பொறியியல் நிறுவனத்தின் (CHEC) பொது முகாமையாளர் ஜாங் சியாவோச்சியாங் (ZHANG XIAOQIANG), CHEC இலங்கை பிரிவின் பொது முகாமையாளர் வாங் காங் (WANG GANG) மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தின் CHEC முகாமைத்துவப் பணிப்பாளர் சியோங் ஹொங்பெங் (XIONG HONGFENG) உள்ளிட்ட பலரும் சந்திப்பில் பங்கேற்றனர்.






