சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 60,000-க்கும் மேற்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல்; 26 பேர், 12 டிங்கி படகுகள் கடற்படையால் கைப்பற்றல்.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்-
மன்னார் சவுத்பார் கடல் மற்றும் கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், கடல் வழியாக சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 60,448 கடல் அட்டைகளுடன் 26 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், 12 டிங்கி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
வடமத்திய கடற்படைக் கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் கஜபா மேற்கொண்ட இந்த விசேட நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான பல டிங்கி படகுகள் சோதனையிடப்பட்டன. அப்போது, கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் தரைக்கு கடத்தப்பட்டதாகக் கருதப்படும் பெருமளவிலான கடல் அட்டைகள் மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட 26 சந்தேகநபர்களும் 21 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்கள் மன்னார் மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட 60,448 கடல் அட்டைகள், 12 டிங்கி படகுகள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி மீன்வளப் பரிசோதகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.





