192 உப தபால் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்.!!!
இலங்கை தபால் திணைக்களத்தில் நிலவி வரும் மனிதவளப் பற்றாக்குறைக்கு தீர்வாக, நீண்டகாலமாக தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வந்த 192 உப தபால் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளன.
பொதுச் சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன், தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இன்று (18) நடைபெற்ற விசேட நிகழ்வில் இந்த நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
ஊடகத்துறை மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் பிரதி அமைச்சர் கௌஷல்ய ஆரியரத்ன ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், புதிய நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் தபால் திணைக்களத்தின் பிரதி தபால் அதிபர்கள், நிறைவேற்று அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் நியமனங்களைப் பெற்றுக்கொண்ட 192 அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நீண்டகாலமாக சேவையாற்றி வந்த தற்காலிக உப தபால் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டமை, தபால் சேவையின் செயற்பாட்டு வலுவை மேம்படுத்துவதோடு, நாட்டின் அஞ்சல் சேவையை மேலும் திறம்பட முன்னெடுக்க உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








