கல்வி பின்னடைவை சுட்டிக்காட்டி: பெற்றோர், மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.!!!
மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் தற்போதைய அதிபரை உடனடியாக மாற்றக் கோரி பாடசாலை சமூகத்தினரால் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்று (22) புதன்கிழமை காலை 7 மணியளவில் பாடசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் பின்னர் மன்னார் வலயக் கல்வி அலுவலகம் வரை விரிவுபடுத்தப்பட்டது.
பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் அபிவிருத்தி பணிகள் கடந்த சில வருடங்களாக பின்னடைவை எதிர்நோக்கி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ள போராட்டக்காரர்கள், தற்போதைய அதிபரை மாற்றி புதிய அதிபர் ஒருவரை நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இந்தப் போராட்டத்தில் பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு தங்களது எதிர்ப்பை வெளியிட்டனர்.
குறித்த அதிபரை மாற்றக் கோரி ஏற்கனவே போராட்டம் நடத்தப்பட்டிருந்த நிலையில், நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்த போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும், தற்போதைய நிர்வாக நிலைமையால் பல மாணவர்கள் பாடசாலையை விட்டு விலகி வேறு பாடசாலைகளுக்கு சென்றுள்ளதாகவும் பெற்றோர் கவலை தெரிவித்தனர்.
பாடசாலை முன்பாக இடம்பெற்ற போராட்டத்திற்கு அதிகாரிகள் உடனடியாக வருகை தந்து கோரிக்கைகளை ஏற்காத காரணத்தால், போராட்டம் வலயக் கல்வி அலுவலகம் வரை முன்னெடுக்கப்பட்டு அதிகாரிகளிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அத்துடன், அதிபரை மாற்றி புதிய அதிபரை நியமிக்க மன்னார் வலயக் கல்வித் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில்லை என பெற்றோர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




