பொலிஸ் பெயரை பயன்படுத்தி இணைய மோசடி; தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம்.!!!
பொலிஸ் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் ஊடாக போலியான தகவல்களை அனுப்பி, பொதுமக்களின் தனிப்பட்ட தரவுகளை திருடும் இணையவழி மோசடிகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிவேகமாக வாகனம் செலுத்தியதாகக் கூறி, பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் பொதுமக்களுக்கு போலியான செய்திகள் அனுப்பப்படுவதாகவும், அவற்றின் மூலம் தனிப்பட்ட தகவல்களைப் பெற்றுக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதிவேக நெடுஞ்சாலைப் பிரிவின் பரிமாற்ற அலகுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான மோசடிகளில் பொதுமக்கள் சிக்கிக் கொள்ளாமல் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் அல்லது ஏனைய செயலிகள் மூலம் கிடைக்கும் சந்தேகத்திற்குரிய இணைப்புகளை ஒருபோதும் திறக்கவோ அணுகவோ வேண்டாம் எனவும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
எந்தவொரு இணைப்பையும் திறப்பதற்கு முன்னர், அதனை அனுப்பியவரின் விபரங்களையும் குறித்த இணையத்தளத்தின் நம்பகத்தன்மையையும் சரிபார்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அடையாளம் தெரியாத இணைப்புகள் ஊடாக தனிப்பட்ட தகவல்கள், வங்கி கணக்கு விபரங்கள், OTP குறியீடுகள் மற்றும் கடவுச்சொற்களை பகிர வேண்டாம் எனவும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
பொலிஸ் தொடர்பான தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு உத்தியோகபூர்வ பொலிஸ் ஊடக அறிக்கைகள் மற்றும் அரசாங்க இணையத்தளங்களை மட்டுமே பயன்படுத்துமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான செய்திகள் அல்லது சமூக வலைத்தளப் பதிவுகள் தொடர்பில் உடனடியாக உரிய அதிகாரிகளுக்கு தகவல் வழங்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன், இணையவழி பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தவிர்ப்பதற்காக கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் செயலிகளை அவ்வப்போது புதுப்பித்து வைத்திருக்குமாறும், அவசரமாக பணம் செலுத்துமாறு கோரும் சந்தேகத்திற்கிடமான செய்திகளை நம்பாமல் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.