பொலிஸ் சீருடையில் மாற்றம்; பொதுமக்களின் கருத்தை எதிர்பார்க்கும் அரசு.!!!
இலங்கை பொலிஸாரின் பாரம்பரிய காக்கி நிற சீருடையில் மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பில் அரசு மற்றும் பாதுகாப்புத் துறையினரால் பல்வேறு மட்டங்களில் ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போதைய வெப்பமண்டல காலநிலைக்கு ஏற்ற வகையிலும், சர்வதேச தரத்திற்கு இணங்கும் வகையிலும் பொலிஸ் சீருடையை நவீனமயப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியர் ஆட்சிக்கால மரபைத் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வரும் காக்கி நிற சீருடை, 1974ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்ட வடிவில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய நவீன தேவைகளுக்கு ஏற்ப சீருடையில் மாற்றம் அவசியம் எனக் கருதப்படுகிறது.
இலங்கையின் அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதமான காலநிலையில் தடிமனான காக்கி ஆடைகளை அணிவது பொலிஸ் அதிகாரிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனடிப்படையில், காக்கி நிறத்திற்கு பதிலாக சர்வதேச அளவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் கடும் நீலம் அல்லது சாம்பல் கலந்த நிறங்களைக் கொண்ட சீருடைகளை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெப்பத்தைத் தாங்கக்கூடியதும் காற்றோட்ட வசதியுடனும் கூடிய நவீன துணி வகைகள், இலேசான தந்திரோபாய பெல்ட்கள் மற்றும் நீண்ட நேரம் அணிவதற்கு ஏற்ற காலணிகளை அறிமுகப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து கருத்துக்களைப் பெறுவதற்கும் அரசு எதிர்பார்த்துள்ளது.
இதனிடையே, பொலிஸ் அதிகாரிகளின் நலனைக் கருத்தில் கொண்டு சீருடைகள் மற்றும் காலணிகளை கொள்வனவு செய்வதற்காக 7,000 ரூபாய் விசேட கொடுப்பனவை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
