பெரும் தீ விபத்தில் சேதமான பிரபல உணவகம்; மக்கள் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.!!!
சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள பிரபல ‘பில் பில்’ (Fil Fil) உணவகத்தில் இன்று (01) திடீரென பாரிய தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொதுமக்கள், சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் களப்பணியாளர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் மற்றும் ஏற்பட்டுள்ள சொத்து சேதத்தின் அளவு தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், தீ விபத்தில் அனைத்தும் எரிந்து சேதமடைந்த பின்னரே கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கல்முனை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவின் தாமதமான செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும், இதனால் மக்களின் உயிர் மற்றும் சொத்துப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பாரிய வர்த்தக நகரமாக விளங்கும் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அவசரகால சேவைகளை மேலும் வினைத்திறனுடன் மேற்கொள்ளும் வகையில், மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவை பலப்படுத்தி நவீன வசதிகளுடன் மேம்படுத்த உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் மற்றும் வர்த்தகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.




