6 வாகனங்களுடன் மோதிய தனியார் பேருந்து: பெண் ஒருவர் பலி; சாரதி கைது – 12 பேர் காயம்.!!!
கேகாலை மாவட்டத்தின் மொலகொட – மங்களகம பகுதியில் இன்று (22) நண்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், 12 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் சாரதி பயிற்சிப் பாடசாலைகளுக்குச் சொந்தமான வாகனங்களும், பயிற்சித் தேர்வுக்காக வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் மீது வேகமாக வந்த தனியார் பஸ் ஒன்று மோதியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் மொத்தம் ஆறு வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன், சம்பவத்தில் காயமடைந்த 12 பேர் சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விபத்துக்கு காரணமானதாகக் கூறப்படும் தனியார் பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.







