கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து வீட்டின் மீது மோதி விபத்து; சாரதி காயம், வீடு கடும் சேதம்.!!!
மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 64ஆம் கட்டைப் பகுதியில் இன்று (10) அதிகாலை சுமார் 5.45 மணியளவில் இடம்பெற்ற சாலை விபத்தில், தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி வீட்டின் மீது மோதியதில் வீடு கடுமையாகச் சேதமடைந்ததுடன், பஸ் சாரதி காயமடைந்துள்ளார்.
கதிர்காமத்திற்குப் பயணிகளை ஏற்றிச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த தனியார் பஸ், திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பஸ் வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் அமைந்திருந்த ரபீக் பாஷில் என்பவருக்குச் சொந்தமான வீட்டின் மீது மோதியுள்ளது.
விபத்து இடம்பெற்ற நேரத்தில் வீட்டில் எவரும் இல்லாததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இருப்பினும், வீட்டின் முன்பகுதி உள்ளிட்ட பகுதிகள் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த பஸ் சாரதி மீட்கப்பட்டு மூதூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நீண்ட தூரப் பயணத்தைத் தொடர்ந்து சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




