அனைவருக்கும் தரமான பொதுப் போக்குவரத்து அவசியம்; தனிநபர் போக்குவரத்து செலவை குறைப்பதே இலக்கு – ஜனாதிபதி.!!!
அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் தரமான, பாதுகாப்பான மற்றும் வசதிகள் கொண்ட பொதுப் போக்குவரத்துச் சேவையை உருவாக்குவது அரசின் முக்கிய நோக்கமாகும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுப் போக்குவரத்து முறைமையை வலுப்படுத்துவதன் மூலம் மக்கள் தனிப்பட்ட போக்குவரத்திற்காக மேற்கொள்ளும் அதிகப்படியான செலவினங்களை குறைத்து, நாட்டளவில் தரமான மற்றும் நம்பகமான போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இலவச சுகாதாரச் சேவையின் மேம்பாட்டிற்கு வழங்கப்படும் அதே அளவிலான முக்கியத்துவத்தை பொதுப் போக்குவரத்துத் துறையின் அபிவிருத்திக்கும் வழங்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட யோசனைகள் தொடர்பாகவும் இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்ட கருத்துகளை வெளியிட்டார்.