ரணில்–சஜித் கூட்டணி அரசுக்கு சவாலல்ல – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.!!!
•”முன்னர் ஒன்றாக இருந்தபோதும் எதையும் சாதிக்கவில்லை; இப்போதும் மாற்றமில்லை” என கருத்து.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் மீண்டும் ஒன்றிணைவதால் தற்போதைய அரசாங்கத்திற்கு எந்தவிதமான அரசியல் சவாலோ அல்லது தாக்கமோ ஏற்படப்போவதில்லை என ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இருவரும் முன்னர் ஒரே அரசியல் அணியில் இணைந்து செயல்பட்டபோதும் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற முடியாமல் பின்னர் பிரிந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். அந்த நிலையில், தற்போது மீண்டும் இணைவதால் புதிய அரசியல் மாற்றம் எதுவும் நிகழப்போவதில்லை என்றும், இதனை சமமான அரசியல் கூட்டணியாகக் கருத முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் சந்திப்பில், ரணில் விக்ரமசிங்க வழிகாட்டும் நிலைப்பாட்டிலும், சஜித் பிரேமதாஸ அவரது கருத்துகளைப் பதிவுசெய்யும் நிலைப்பாட்டிலும் காணப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் அனுபவத்தைப் பயன்படுத்தி கூட்டத்தில் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி, தன்னை தலைவராக வெளிப்படுத்தியதுடன், சஜித் பிரேமதாஸவை இரண்டாம் நிலைக்கும் கீழாகத் தள்ளியுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
மேலும், ரணில்–சஜித் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தவர்களில் பலர் நீதிமன்ற வழக்குகள், பிணை அல்லது விசாரணைகளுடன் தொடர்புடையவர்களாக இருந்ததாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்து, நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் சூழலில், எதிர்க்கட்சியினரின் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் குற்றப் பின்னணிகள் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த விசாரணைகளிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற அச்சம் மற்றும் பதற்றத்தின் காரணமாகவே சஜித் பிரேமதாஸ, ரணில் விக்ரமசிங்க மற்றும் நாமல் ராஜபக்ச உள்ளிட்டோர் ஒன்றிணைந்து சந்திப்புகளை நடத்தத் தொடங்கியுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.