ரூ.1.41 கோடி தங்க நகைகள் கொள்ளை; மூன்று பெண்கள் உள்ளிட்ட 4 பேர் கைது.!!!
வீடு ஒன்றை உடைத்து ரூ.1 கோடியே 41 இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பெண்கள் உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களை கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூலை 18ஆம் திகதி வீடொன்றை உடைத்து ரூ.14,100,000 பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டதாக கல்கிசை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், நேற்று (6) தெஹிவளை பகுதியில் குறித்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த குற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியதாகக் கூறப்படும் ஹட்டன் பத்தன பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் 8 ஜோடி தங்கத் தோடுகள், 4 தங்கப் பதக்கங்கள், ஒரு தங்க வளையல், 10 தங்கச் சங்கிலிகள், ஒரு கைக்காப்பு மற்றும் 2 தங்க மோதிரங்கள் உள்ளிட்ட பல தங்கப் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் 28, 46 மற்றும் 53 வயதுடையவர்கள் எனவும், ஆண் சந்தேகநபர் 28 வயதுடைய ஹட்டன் பத்தன பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.