அஸ்வெசும நிதியில் ரூ.16.2 மில்லியன் மோசடி குற்றச்சாட்டு; இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியல்.!!!
• ஹட்டன் நீதவான் அதிரடி உத்தரவு – மேலும் அதிகாரிகள் தொடர்புபட்டுள்ளனரா என விசாரணை.
நோர்வூட் பிரதேச செயலகத்தின் அஸ்வெசும நலன்புரித் திட்டப் பயனாளிகளுக்குச் சொந்தமான சுமார் 16.2 மில்லியன் ரூபா நிதியை, உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி மோசடி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இரு பெண் அதிகாரிகளையும் எதிர்வரும் ஓகஸ்ட் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹட்டன் நீதவான் பீட்டர் போல் உத்தரவிட்டுள்ளார்.
நோர்வூட் பிரதேச செயலகத்தின் அஸ்வெசும பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரிகளாக பணியாற்றிய ஹட்டன்–டிக்கோயாவைச் சேர்ந்த 31 வயதான கிருஷ்ணமூர்த்தி லலிதா மற்றும் ஹட்டன்–டிக்கோயா கேபெக்ஸ் காலனியைச் சேர்ந்த 32 வயதான விஸ்வநாதன் துஷாதரணி ஆகிய இரு பெண் அதிகாரிகளே இவ்வாறு மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நோர்வூட் பிரதேச செயலாளர் சமீர கம்லத் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், ஹட்டன் பொலிஸ் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவினரால் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.
சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் பணத்தை மீண்டும் சம்பந்தப்பட்ட கணக்கில் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்து பிணை வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
எனினும், பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், முழுமையான கணக்காய்வு அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்றும், இந்த மோசடியில் மேலும் சில அதிகாரிகள் தொடர்புபட்டிருக்கலாம் என்ற முறைப்பாடு தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதவான், அஸ்வெசும நலன்புரி நிதி வறிய மக்களுக்காக வழங்கப்படுவதாகவும், அதனை பொறுப்பான அரச அதிகாரிகள் மோசடி செய்வதற்கு எந்தவித உரிமையும் இல்லை என்றும் திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இரு சந்தேகநபர்களையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான், வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் 25ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
அஸ்வெசும பயனாளிகள் சிரமம்
இதற்கிடையில், நோர்வூட் பிரதேச செயலகத்தின் அஸ்வெசும கணக்கில் நிதி வரவு வைக்கப்படாத பயனாளிகள், தங்களது கணக்குகளைச் சரிபார்ப்பதற்காக தினமும் நோர்வூட் பிரதேச செயலகத்திற்குச் சென்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அங்கு அலுவலக அதிகாரிகள், பயனாளிகளிடமிருந்து வங்கிக் கணக்கு இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட தகவல்களைப் பெற்றுக்கொண்டு, அது தொடர்பான தகவல்களை வழங்குவதாகத் தெரிவித்த பின்னர், பயனாளிகளை மீண்டும் திருப்பி அனுப்புவதாகவும் கூறப்படுகிறது.
இதனால், அஸ்வெசும நிதி கிடைக்காத பயனாளிகள் மத்தியில் குழப்பமும் அசௌகரியமும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.




