தொழிற்கல்வி மேம்பாட்டுக்கு ரூ.42,000 மில்லியன் ஒதுக்கீடு; 2027–2031 காலப்பகுதியில் புதிய திட்டம்.!!!
2027 முதல் 2031 வரையான ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் தொழிற்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக சுமார் ரூ.42,000 மில்லியன் நிதியை ஒதுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, சுமார் ரூ.4,000 மில்லியன் தொழிற்பயிற்சி அதிகாரசபைக்கு (VTA) ஒதுக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முதலீட்டின் மூலம் நாட்டின் ஒவ்வொரு மாகாணத்திலும் மாணவர்களின் கல்வி மற்றும் தொழில் இலக்குகளை அடைவதற்கு உதவும் வகையில், தொழிற்பயிற்சி அதிகாரசபையை முக்கிய சிறப்புத் திறன் மையமாக அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தின் நோக்கமாகும்.
மாறிவரும் உலகின் தேவைகளுக்கு ஏற்ப புதிய கற்கைநெறிகளை அறிமுகப்படுத்துதல், பாடத்திட்டங்களை நவீனமயப்படுத்துதல், பணியாளர் வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் மாணவர்களுக்கான கல்வி வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் இந்த முதலீட்டின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நேற்று (11) நடைபெற்ற “இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் 5ஆவது டிப்ளோமா பட்டமளிப்பு விழா – 2026” நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் மூலம் தொழில்துறையின் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ற திறமையான மனித வளத்தை உருவாக்குவதுடன், இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகளையும் அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.






