விஞ்ஞான ஆராய்ச்சிகள் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் பொருளாதாரத்தையும் உயர்த்த வேண்டும் – ஜனாதிபதி.!!!
• 2027 வரவு செலவுத் திட்ட பூர்வாங்க கலந்துரையாடலில் வலியுறுத்தல்.
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத் துறையில் மேற்கொள்ளப்படும் புதிய ஆராய்ச்சிகள் பொதுமக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதுடன், நாட்டின் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கும் நேரடியாக பங்களிக்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (05) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் உலகில் அதிக வருமானம் ஈட்டும் நாடுகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மனித தேவைகளை பூர்த்தி செய்யும் முறைகளை மாற்றியமைப்பது ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மூலமே சாத்தியமாகும் என குறிப்பிட்டார்.
எதிர்கால உலகில் முன்னேற்றம் அடைய புதிய தேவைகளை சரியாக அடையாளம் கண்டு அதற்கேற்ற அறிவியல் தீர்வுகளை உருவாக்கும் நாடுகளே வெற்றி பெறும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், வருமானத்தை அதிகரிப்பதற்கும் தேவையான தகவல்கள் மற்றும் தரவுகளை வழங்கும் முறைமை ஒன்றை உருவாக்குவதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மேலும், பல்வேறு அமைச்சுக்களின் கீழ் செயற்படும் ஆராய்ச்சிப் பிரிவுகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதற்காக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் விசேட பிரிவு ஒன்றை அமைப்பதன் முக்கியத்துவமும் இதன்போது எடுத்துரைக்கப்பட்டது.
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் உள்ள 14 நிறுவனங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவிகளின் கீழ் முன்னெடுத்து வரும் திட்டங்களின் நிதி முன்னேற்றம் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது.
இலங்கை தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மத்திய நிலையம் (NERDC) ஊடாக முன்னெடுக்கப்படும் யானை வேலி அமைக்கும் திட்டம், குறைந்த செலவிலான சுற்றுச்சூழலுக்கு நட்பான கட்டிட நிர்மாண ஆராய்ச்சிகள் உள்ளிட்ட திட்டங்களின் முன்னேற்றமும் மீளாய்வு செய்யப்பட்டது.
அதேவேளை, விஞ்ஞான கண்டுபிடிப்புகளை வணிகமயமாக்குவதில் காணப்படும் சிக்கல்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
விவசாயம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சுக்களின் கீழ் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளை ஒருங்கிணைந்த முறையில் முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ருஹுணு பல்கலைக்கழகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் கருவா சார்ந்த தயாரிப்புகள் தொடர்பான ஆராய்ச்சிகள், ஆயுர்வேத தயாரிப்புகளின் அபிவிருத்தி நடவடிக்கைகள், தேசிய விஞ்ஞான மன்றத்தின் திட்டங்கள் மற்றும் பல்கலைக்கழக ஆராய்ச்சிகளில் காணப்படும் கொள்முதல் சிக்கல்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், அனர்த்தங்களை முன்கூட்டியே எதிர்கொள்வதற்கான விஞ்ஞானபூர்வமான செயற்திட்ட வரைபடம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வெளியிடப்படவுள்ளதாகவும், பிம்ஸ்டெக் நாடுகளுக்கிடையிலான தொழில்நுட்ப பரிமாற்றத் திட்டம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
காட்டு யானைகள் ரயில்களுடன் மோதுவதை தடுக்கும் வகையில் ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான வெப்ப உணர் கமரா அமைப்பு தொடர்பான திட்டமும் இங்கு ஆராயப்பட்டது.
விண்வெளி சுற்றுலா (Astro-Tourism), இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் மற்றும் முந்திரி, நெல், தேயிலை உள்ளிட்ட விவசாயத் துறைகளுக்கான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றமும் மதிப்பாய்வு செய்யப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமானாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் அமைச்சு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.




