கடல் மார்க்க கடத்தல் முறியடிப்பு; 1,580 கிலோ பீடி இலைகளுடன் ஒருவர் கைது.!!!
-கற்பிட்டி – எம்.எச்.எம். சியாஜ்-
சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரூ.11 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான பீடி இலைகளை இலங்கை கடலோரக் காவல் திணைக்களம் கைப்பற்றியுள்ளது.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை, கடலோரக் காவல் திணைக்களத்திற்கு கிடைத்த விசேட புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், இன்று (16) வென்னப்புவ அரச புலனாய்வு அதிகாரிகள் மற்றும் இலங்கை கடற்படையினருடன் இணைந்து கட்டுநேரி தெப்பன் துறைமுகப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, 41 மூட்டைகளில் பொதி செய்யப்பட்டிருந்த சுமார் 1,580 கிலோகிராம் (ஈர எடையுடன்) பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், பீடி இலைகளை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு டிங்கி படகுகள் மற்றும் ஒரு லொறியும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் மொத்த பெறுமதி ரூ.11 மில்லியனுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள், படகுகள் மற்றும் லொறி ஆகியவை மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக வென்னப்புவ கலால் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடலோரக் காவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

