நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டக்களப்பில் பிரபல உணவகத்திற்கு சீல் – இரு வாரங்களுக்கு மூட உத்தரவு, ரூ.50,000 அபராதம்.!!!
(ஜே.கே)
மட்டக்களப்பு நகரில் இயங்கி வந்த பிரபல உணவகம் ஒன்றுக்கு நேற்று மாலை நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த உணவகத்தை இரு வாரங்களுக்கு மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், ரூபாய் 50,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மனித பாவனைக்கு உகந்ததல்லாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ். முரளீஸ்வரன் அவர்களின் வழிகாட்டலிலும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ. உதயகுமார் அவர்களின் ஆலோசனையிலும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் பரிசோதனையின்போது, மனித பாவனைக்கு உகந்ததல்லாத உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இதே ஹோட்டல் ஏற்கனவே இரண்டு முறை நீதிமன்ற எச்சரிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் த. மிதுன்ராஜ் மற்றும் ஜெ. யசோதரன் முன்னெடுத்தனர்.




