மட்டக்களப்பில் தொடர் கடை உடைப்பு: கொள்ளையனை அடையாளம் காண பொதுமக்கள் உதவி கோரல்.!!!
மட்டக்களப்பு சிறுவர் பூங்கா (Children’s Park) முன்பாக அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற தொடர் கடை உடைப்பு சம்பவம் அப்பகுதி வியாபாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘Tomorrow Fashion’, ‘J R Tech’ உள்ளிட்ட அடுத்தடுத்த நான்கு கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் நேற்று இரவு சுமார் 12.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV கண்காணிப்பு கேமராக்களில் சந்தேக நபரின் உருவம் பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காணொளிக் காட்சிகளின் அடிப்படையில், புகைப்படத்தில் காணப்படும் நபரே குறித்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடையவர் என பலத்த சந்தேகம் நிலவுகிறது. மேலும், இதே நபர் கடந்த காலத்தில் கதுறுவெல பகுதியில் இடம்பெற்ற இதேபோன்ற தொடர் கடை உடைப்பு சம்பவங்களுடனும் தொடர்புடையவராக இருக்கலாம் என விசாரணை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது. குறித்த நபர் தொடர்பாக ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்களுக்கோ அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இரவு நேரங்களில் கடைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறும் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குற்றவாளியை விரைவில் கைது செய்ய பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.
