கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.59 இலட்சம் மதிப்புள்ள கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல்; சீன வர்த்தகர் கைது.!!!
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்த முற்பட்ட சுமார் ரூ.59 இலட்சத்து 10 ஆயிரம் பெறுமதியான வெளிநாட்டுத் தயாரிப்புச் சிகரெட்டுகளுடன், 40 வயதுடைய சீனாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், வருகை முனையத்தின் பசுமைப் பாதை (Green Channel) ஊடாக சுங்கச் சோதனையைத் தவிர்த்து நாட்டுக்குள் நுழைய முயன்றபோது, அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், இரண்டு பயணப் பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 197 சிகரெட் பெட்டிகளில் அடங்கிய 39,400 சீனத் தயாரிப்புச் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன.
ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, சந்தேகநபர் சீனாவில் இருந்து சிகரெட்டுகளை வாங்கி, இந்தியாவின் சென்னை வழியாக இண்டிகோ விமான சேவை மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.