தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதை நிறைவு; 1.75 இலட்சம் குடும்பங்களுக்கு நேரடி பலன்.!!!
இலங்கையின் நீர்ப்பாசன வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும், வடமத்திய மாகாணத்தின் மாபெரும் கால்வாய் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதையின் கட்டுமானப் பணிகள் நேற்று (15) வெற்றிகரமாக நிறைவடைந்தன.
சுமார் ரூ.50 பில்லியன் செலவில், ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புடன், விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சினால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மொரகஹகந்த மற்றும் களுகங்கை நீர்த்தேக்கங்களிலிருந்து வடமத்திய மாகாணத்தின் உலர் வலயப் பகுதிகளுக்கு நீரை சீராக விநியோகிப்பதே திட்டத்தின் பிரதான நோக்கமாகும். மேலும், நீண்டகாலமாக நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் (CKDu) பிரச்சினைக்கு நிலையான தீர்வை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து சுமார் 95 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் இந்த நீர்ப்பாசன அமைப்பில், பலுகஸ்வெவ பகுதியில் நிலத்தடிக்குள் நுழையும் நீர், சுமார் 28 கிலோமீட்டர் நீளமுடைய சுரங்கப்பாதை வழியாக எலஹெர – கோந்துருவாவ பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்தச் சுரங்கப்பாதை, இரட்டை கவசம் கொண்ட நவீன சுரங்கத் தோண்டும் இயந்திரத்தின் (Double Shield Tunnel Boring Machine) உதவியுடன் உள்நாட்டு மற்றும் சீனப் பொறியியலாளர்களின் தொழில்நுட்ப ஒத்துழைப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் வடமத்திய மாகாணத்தில் உள்ள சுமார் 1.75 இலட்சம் குடும்பங்கள் நேரடியாகப் பயனடையவுள்ளதுடன், ஆண்டுதோறும் 40 மில்லியன் கன மீட்டர் குடிநீர் வழங்கப்படவுள்ளது. மேலும், மொத்தமாக 70 மில்லியன் கன மீட்டர் நீர் இத்திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 74,000 ஹெக்டேயர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறவுள்ளதோடு, 12 பிரதான நீர்ப்பாசன அமைப்புகள் மற்றும் 1,500-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் நடுத்தர குளங்கள் மீளுயிர் பெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட நீர்ப்பாசனப் பிரதி அமைச்சர்கள் அரவிந்த செனரத் மற்றும் நாமல் கருணாரத்ன ஆகியோர், 2030 ஆம் ஆண்டுக்குள் முழுத் திட்டத்தையும் நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தனர்.




