பணம் தூய்தாக்கல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்.!!!
பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியுதவியைத் தடுக்கும் (AML/CFT) சர்வதேச தரநிலைகள் தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளவுள்ள மூன்றாவது பரஸ்பர மதிப்பீடு (3rd Mutual Evaluation) குறித்த உயர்மட்ட விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
சர்வதேச நிதி அமைப்பில் இலங்கையின் நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்த மதிப்பீடு முக்கியமானது என்பதால், அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டியது அவசியம் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
நிதியியல் தொடர்பான செயலணி (FATF) முன்வைத்துள்ள 40 பரிந்துரைகளின் தொழில்நுட்ப இணக்கப்பாடும், அவற்றின் அமுலாக்கத்தின் மூலம் கிடைக்க வேண்டிய 11 உடனடி பலன்களின் செயல்திறனும் இந்த மதிப்பீட்டில் ஆய்வு செய்யப்படவுள்ளன. இதற்கான கள ஆய்வுகள் இவ்வாண்டு முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அடுத்த சில மாதங்களுக்குள் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நிறைவு செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தீவிரமாக செயல்பட வேண்டும் என ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
இலங்கை 2023ஆம் ஆண்டு முதல் இந்த மதிப்பீட்டிற்காக தயாராகி வருவதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இறுதிக்கட்ட தயாரிப்புகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தேசிய அளவிலான மதிப்பீட்டு நடவடிக்கையை ஆசிய–பசுபிக் பணம் தூய்தாக்கல் தொடர்பான குழு (APG) மேற்கொள்ளவுள்ளது. இதற்காக சுமார் 25 அரச நிறுவனங்கள் பங்கேற்கின்றன. முழுமையான ஒருங்கிணைப்புப் பொறுப்பை இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு (FIU) மேற்கொண்டு வருகிறது.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாத நிதியுதவி தடுப்பு செயலணி, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடைமுறைப்படுத்த வேண்டிய செயல் திட்டங்களின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிக்கவுள்ளது.
இதன்போது, அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களின் செயல் திட்ட முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டதுடன், அமுலாக்கத்தில் காணப்படும் சவால்கள் மற்றும் அவற்றை விரைவாகத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், இணையவழி சூதாட்டத்தை (Online Gambling) கட்டுப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளின் தற்போதைய நிலை குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்தார். குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்படும் சொத்துக்களை நிர்வகிப்பதற்கான அதிகாரசபையை நிறுவும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அதற்கான பணியாளர்கள் இணைக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தக் கலந்துரையாடலில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, அமைச்சுகளின் செயலாளர்கள், சட்ட மா அதிபர், பொலிஸ்மா அதிபர் மற்றும் பல்வேறு முக்கிய அரச நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.






