மோட்டார் சைக்கிள் வாங்குவதாக ஏமாற்றி திருட்டு; மட்டக்களப்பில் சந்தேகநபர் கைது.!!!
மட்டக்களப்பில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை வாங்குவதாகக் கூறி, சோதனை ஓட்டம் மேற்கொள்வதாக நம்பவைத்து திருடிச் சென்றதாகக் கூறப்படும் நபர் ஒருவரை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சத்துருக்கொண்டான் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரிடமிருந்து திருடப்பட்டதாகக் கூறப்படும் மூன்று மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இரண்டு வாரங்களுக்கு முன்னர் காத்தான்குடியில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றிற்கு சென்ற சந்தேகநபர், மோட்டார் சைக்கிளொன்றை கொள்வனவு செய்ய விருப்பம் உள்ளதாக தெரிவித்து சோதனை ஓட்டத்திற்காக அனுமதி பெற்றுள்ளார்.
இதன்போது, குறித்த மோட்டார் சைக்கிளுடன் அவர் தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, இணையவழி விற்பனை தளமான Ikman.lk இல் மோட்டார் சைக்கிளை விற்பனைக்கு விளம்பரப்படுத்தியிருந்த கொக்கட்டிச்சோலை பகுதியைச் சேர்ந்த ஒருவரை தொடர்புகொண்டு, வாகனத்தை வாங்க விருப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பின்னர், மட்டக்களப்பு–திருகோணமலை பிரதான வீதியில் அமைந்துள்ள போக்குவரத்து சமிக்ஞை விளக்கு அருகில் சந்திக்குமாறு அழைத்துள்ளார். அங்கு மோட்டார் சைக்கிளை சோதனை ஓட்டம் செய்ய வேண்டும் எனக் கூறி, தன்னிடம் இருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளை அடகாக வழங்குவது போன்று ஒப்படைத்த பின்னர், குறித்த நபரின் மோட்டார் சைக்கிளையும் எடுத்துச் சென்று தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் ஒன்று வாகரை பகுதியில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடந்த 2023 ஆம் ஆண்டிலும் இதேபோன்ற முறையில் மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடியிருந்ததாகவும், கடந்த காலங்களில் எட்டு குற்றச்செயல்கள் தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் இருந்த பழைய குற்றவாளி எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.