5% பொருளாதார வளர்ச்சியை 8% ஆக உயர்த்த இலக்கு – தகவல் தொழில்நுட்பத் துறையின் பங்களிப்பு அவசியம்: ஜனாதிபதி.!!!
தற்போது சுமார் 5% மட்டத்தில் உள்ள நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எதிர்வரும் ஆண்டுகளில் 7% முதல் 8% வரை உயர்த்துவதே அரசாங்கத்தின் பிரதான இலக்காகும் என ஜனாதிபதி தெரிவித்தார். அந்த இலக்கை அடைவதில் தகவல் தொழில்நுட்பம், மின் மற்றும் இலத்திரனியல் துறைகளின் விரிவான பங்களிப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தகவல் தொழில்நுட்பம், மின் மற்றும் இலத்திரனியல் துறைகளில் முன்னணி முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினருடன் இன்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டபோது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் எதிர்கால பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு உள்நாட்டு தொழில்துறையினரை மேலும் பலப்படுத்துவது முக்கியமானதாகும் என சுட்டிக்காட்டிய அவர், நாட்டில் உள்ள திறன்கள் மற்றும் சாத்தியங்களை அடையாளம் கண்டு அவற்றை நடைமுறைப்படுத்த அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுமாறு தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்தார்.
மேலும், இத்துறையின் வளர்ச்சிக்கான தங்களது முன்மொழிவுகள், எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் தொடர்பான விரிவான அறிக்கையொன்றை விரைவில் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.
இக்கலந்துரையாடலில் தகவல் தொழில்நுட்பம், மின் மற்றும் இலத்திரனியல் துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.