இலங்கையில் உற்பத்தி செய்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு வரிவிலக்கு.!!!
இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிவிலக்கு கிடைப்பதாக தென் இந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் கணேசநாதன் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்திருந்த இலங்கையின் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான வணிக விளக்கவுரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதாகவும், இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு இந்தியா முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்திய முதலீட்டாளர்களை இலங்கைக்கு ஈர்ப்பதற்காக நிலம், பத்தாண்டு வரிவிலக்கு மற்றும் இயந்திர தளவாட சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உற்பத்தி செய்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிவிலக்கு கிடைப்பதால், இந்திய முதலீட்டாளர்களுக்கு இலங்கை ஒரு முக்கிய வர்த்தக வாய்ப்பாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், பல்வேறு நாடுகளுடன் இலங்கை மேற்கொண்டுள்ள வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்களை பயன்படுத்தி இந்திய நிறுவனங்கள் இலங்கையை வர்த்தக நுழைவாயிலாக பயன்படுத்திக்கொள்ள முடியும் எனவும் துணை உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.