தாய்லாந்து மகா சங்க நாயக்க தேரர்கள் பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்திப்பு; பௌத்த உறவுகளை வலுப்படுத்த பேச்சு.!!!
தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மகா சங்க நாயக்க தேரர்கள் குழுவினர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இன்று (18) அலரி மாளிகையில் சந்தித்து சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந்தச் சந்திப்பில் அதிவணக்கத்திற்குரிய ப்ரா தம்மவஜிரபண்யாசார்ய மஹாதேரர், வட் ப்ரா செதுபொன் விமோல்மங்கலாராம் ராஜவரமஹாவிஹாரையின் பிரதி விகாராதிபதி மற்றும் மஹாசுலாலொங்கோர்ன்ராஜவித்யாலய பல்கலைக்கழகத்தின் திரிபிடக கல்வி மையத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட தாய்லாந்தின் மகா சங்க நாயக்க தேரர்கள் கலந்துகொண்டனர்.
சந்திப்பின்போது, இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையே பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் பௌத்த மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, மத ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை மேம்படுத்துவது தொடர்பாக விரிவான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பௌத்த பாரம்பரியம் மற்றும் கலாசார உறவுகளை எதிர்காலத்திலும் மேலும் பலப்படுத்துவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
கலந்துரையாடலின் நிறைவில், இலங்கை–தாய்லாந்து நட்புறவையும் பௌத்த பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் வகையில், தாய்லாந்தின் மகா சங்க நாயக்க தேரர்களினால் பிரதமருக்கு விசேட நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன. இந்த நினைவுப் பரிசுகள் இரு நாடுகளினதும் பொதுவான பௌத்த மரபு, கலாசார விழுமியங்கள் மற்றும் பரஸ்பர மரியாதையின் அடையாளங்களாக அமைந்தன.



