உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 28, 2026

Hot News

IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!
IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!

Share :

மட்டக்களப்பில் முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து கொள்ளை.!!!

மட்டக்களப்பு நகரில் முச்சக்கரவண்டி ஒன்றைக் கூலிக்கு அமர்த்திச் சென்ற கொள்ளையர்கள், அதன் சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து, அவரிடமிருந்த தங்க ஆபரணங்கள், பணம் மற்றும் கைபேசியை கொள்ளையடித்துச் சென்ற அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மயங்கிய நிலையில் ரிதிதென்னை காட்டுப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த 62 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி, வியாழக்கிழமை (28) காலை மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு பூநொச்சிமுனைப் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார். இவர் மட்டக்களப்பு நகரின் ‘சின்ன ஆஸ்பத்திரி’ முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இருந்து தனது வாகனத்தை இயக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ தினமான (27) பிற்பகல் 3.00 மணியளவில் வீட்டிற்கு சென்று மதிய உணவை உட்கொண்ட அவர், பின்னர் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார்.

இரவு 7.00 மணியளவில் இரவு உணவிற்காக இடியப்பம் வாங்கிக்கொண்டு வீடு திரும்புவதாகத் தனது உறவினர்களுக்குக் கைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மட்டக்களப்பு நகரிலுள்ள ஆட்டோ தரிப்பிடத்தில் இருந்து நபர் ஒருவர் வாழைச்சேனைக்கு செல்ல வேண்டுமென கூறி, முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், இரவு 11.00 மணியாகியும் சாரதி வீடு திரும்பாததாலும், அவரது கைபேசி செயலிழந்திருந்ததாலும் பதற்றமடைந்த உறவினர்கள், அவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து, (28) காலை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரிதிதென்னை காட்டுப் பகுதியை அண்மித்த இடத்தில் முச்சக்கரவண்டி ஒன்று அநாதரவாக நிற்பதை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர்.

அருகில் சென்று பார்வையிட்டபோது, அதற்குள் சாரதி மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு உடனடியாக வாழைச்சேனை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், மயக்கமுற்றிருந்த சாரதியை மீட்டு அவசர சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

கொள்ளையர்கள் திட்டமிட்ட வகையில் முச்சக்கரவண்டியை வாழைச்சேனை நோக்கி வாடகைக்கு அமர்த்திச் சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வழியில் சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து அவர் சுயநினைவை இழந்த பின்னர், அவரிடமிருந்த ஒரு பவுன் தங்க மோதிரம், பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றை கொள்ளையடித்துக்கொண்டு, அவரை ஆட்டோவுடன் காட்டுப் பகுதியில் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரும், வாழைச்சேனை பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதுடன், தப்பியோடிய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 929077

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time