மட்டக்களப்பில் 2 பிஞ்சு உயிர்களை காவுகொண்ட சோகம்: “கேன்சர் நாடகம்” ஆடி பிச்சை எடுத்த தந்தை கைது.!!!
மட்டக்களப்பு நகரிலுள்ள விடுதி ஒன்றில் இரு பிஞ்சு குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணியில், நாடையே உலுக்கும் வகையிலான பல அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
கடந்த புதன்கிழமை (27) மாலை மட்டக்களப்பு – திருகோணமலை வீதியிலுள்ள விடுதி அறையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், இரண்டு சிறுவர்கள் நச்சுப்புகையை சுவாசித்து பரிதாபமாக உயிரிழந்தனர். கட்டில் மெத்தை தீப்பற்றி எரிந்ததால் அறை முழுவதும் புகை பரவிய நிலையில், குழந்தைகள் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட விசேட புலனாய்வுப் பிரிவினரும் மாவட்ட தலைமையக பொலிஸாரும் இணைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் போது, குழந்தைகளின் தந்தை பயன்படுத்திய அடையாள அட்டையில் சந்தேகம் எழுந்த நிலையில், அது 2023ஆம் ஆண்டு பதுளையைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து தொலைந்துபோன அடையாள அட்டை என்பது கண்டறியப்பட்டது.
அக்குரஸ்ஸையைச் சேர்ந்த 31 வயதுடைய குவண்டா ஹண்டி சுபுன் எரண்ட சில்வா என்பவர், அந்த அடையாள அட்டையை பயன்படுத்தி தனது உண்மையான அடையாளத்தை மறைத்து பல பகுதிகளில் மோசடிகளில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“என் மனைவி காத்தான்குடி வைத்தியசாலையில் புற்றுநோயால் சிகிச்சை பெற்று வருகிறார்” எனக் கூறி, கடந்த 20ஆம் திகதி குறித்த விடுதியில் அறை வாடகைக்கு எடுத்த அவர், பின்னர் பள்ளிவாசல்களுக்கு சென்று மக்களிடம் இரக்கம் கேட்டு பிச்சை எடுத்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவ தினத்தன்று பிற்பகல் 2 மணியளவில் குழந்தைகளை அறைக்குள் பூட்டிவிட்டு, மனைவியை பார்க்கச் செல்வதாக கூறி வெளியேறிய அவர், பின்னர் கீழ்தளத்தில் உள்ள மதுபானசாலையில் மது அருந்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் போதை நிலையில் அறைக்குத் திரும்பியபோதுதான், தீ விபத்தில் தனது இரு குழந்தைகளும் உயிரிழந்துள்ளமை தெரியவந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் விசாரணைகளில், அவரது மனைவிக்கு எந்தவித புற்றுநோயும் இல்லை என்பதும், அவர் மாத்தறையில் நலமாக வசித்து வருவதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நபர் ஏற்கனவே பல மாவட்டங்களில் குழந்தைகளை பயன்படுத்தி மோசடி செய்த குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டவராகவும், அவருக்கு எதிராக பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2021ஆம் ஆண்டு அத்துருகிரிய பொலிஸாராலும், 2022ஆம் ஆண்டு சப்புகஸ்கந்த பொலிஸாராலும் இவர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், 2022 செப்டம்பர் மாதம் இவருக்கு எதிராக பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குழந்தைகளை பயன்படுத்தி இரக்கத்தை தூண்டி பிச்சை எடுத்து வந்த குறித்த தந்தை வியாழக்கிழமை (28) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த குழந்தைகளின் உண்மையான தாயார் தற்போது மாத்தறையிலிருந்து மட்டக்களப்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிஞ்சு குழந்தைகளை தனியாக அறைக்குள் விட்டுவிட்டு மதுபானசாலைக்குச் சென்ற தந்தையின் அலட்சியத்தால் இரண்டு உயிர்கள் பலியான இந்தச் சம்பவம், சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.