பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி தவறி விழுந்து பரிதாப உயிரிழப்பு.!!!
மாத்தறை மாவட்டத்தின் கொடஉட பகுதியில் இன்று (21) காலை இடம்பெற்ற துயர சம்பவத்தில், பாடசாலைக்குச் செல்ல பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி ஒருவர் தவறி விழுந்து பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர், கொடஉட பகுதியைச் சேர்ந்த சனுதி சேனாரா என்ற 6 வயதுடைய பாடசாலை மாணவி ஆவார்.
பொலிஸார் தெரிவித்ததாவது, மாத்தறையிலிருந்து மித்தெனிய நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தை கை காட்டி நிறுத்திய சிறுமி, தனது தாயார் மற்றும் இளைய சகோதரனுடன் பேருந்தில் ஏற முயன்றுள்ளார்.
முதலில் தாயாரும் இளைய சகோதரனும் பேருந்தின் முன்பக்க கதவு வழியாக ஏறிய நிலையில், பின்னர் சிறுமி ஏற முற்பட்டபோது பேருந்து முன்னோக்கி நகர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சமநிலையை இழந்த சிறுமி கீழே விழுந்து, அதே பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்துள்ளார்.
சிறுமியை உடனடியாக மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டபோதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துயரச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.