காட்டில் கட்டுத் துப்பாக்கி வெடிப்பு: ஒருவர் பலி – ஒருவர் கைது.!!!
(கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்)
ஆனமடுவ பிரதேசத்தில் வனவிலங்குகளை வேட்டையாடும் நோக்கில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை ஆனமடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் கடந்த நேற்று (17) ஆனமடுவ காட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ஆனமடுவ, பரமாகந்தகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ரன்கொத்பேடி துரயலாகே தினேஷ் மங்கள அமரதாச என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பரமாகந்த மலையின் பின்புற காட்டுப் பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடும் நோக்கில் கட்டுத் துப்பாக்கி ஒன்றை சட்டவிரோதமாக அமைத்திருந்ததாகவும், வெள்ளிக்கிழமை (17) அன்று அந்த இடத்திற்கு சென்றபோது அத்துப்பாக்கி வெடித்ததில் தினேஷ் என்பவர் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டதாகவும் சந்தேகநபர் ஒருவர் ஆனமடுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டதுடன் மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
எனினும் உயிரிழந்த நபர் எதற்காக அந்த காட்டுப் பகுதிக்கு சென்றார் என்பது தொடர்பான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பரமாகந்தகம பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், உயிரிழந்தவரின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளை ஆனமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.